இந்த ஆண்டும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா வெற்றிகரமாக நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. ஒருபக்கம் ஆங்காங்கே வெளி அரங்குகளில் ஒருங்கிணைக்கப்படும் வெவ்வேறு விழாக்கள், போட்டிகள் இன்னோரு பக்கம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பொருண்மையில் ஜீ தமிழ் இன்று காலை சரியாக 12 மணிக்கு ஒளிபரப்பவிருக்கிற ‘தமிழா! தமிழா!’ நிகழ்ச்சி என எல்லாமே ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்துகொண்டதில் யார்தான் வரப்போகிறார்கள் என்று கொஞ்சம் தயக்கமாகவே யோசித்துக்கொண்டிருந்தோம். ஆனாலும் 40ற்கும் மேற்பட்டவர்கள் ஜூம் வழியாகவும், 20ற்கும் அதிகமானவர்கள் யூட்டூபிலும் நேரடியாகப் பங்கேற்றது மனதுக்கு ஆறுதலைத் தந்தது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திரு. கார்த்திக் மற்றும் திருமதி. சுவாதி சந்தனா தம்பதிகள் கொடுத்துச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள். சித்ராக்காவின் வழியாக கல்லூரி பயிலும் நிறைய பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வருகிறார்கள். அத்தோடு அவ்வப்போது முன்மொழியும் பல பார்வையற்றவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் முன்வந்து செய்பவர்கள். ஒரு ஆண்டில் சித்ராக்காவின் முன்மொழிவின் பெயராலேயே அவர்களிடமிருந்து கணிசமான உதவிகள் பல பார்வையற்றவர்களைச் சென்றடைந்து வருகின்றன.
அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்த நம்மிடம் என்ன இருக்கிறது நன்றியைத் தவிர. சரியான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த வகையில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டு கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டதுபோல் அல்லாமல், இந்த ஆண்டு இணையவழியிலான சதுரங்கப்போட்டியினை சங்கம் ஒருங்கிணைத்து ரூ. 16000 மதிப்புடைய பரிசுத்தொகைகளை வழங்கியிருக்கிறது. நிகழ்ச்சியைத் தன் பிசிரற்ற குரலால் தொகுத்து வழங்கிய தங்கை சோஃபியாமாலதி, கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை ஏற்றாலும், அதைச் சரியாக செய்து முடித்த தங்கை ஷியாமலா இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.
சிறப்பு அழைப்பாளரான திரு. கார்த்திக் அவர்கள் சொன்னதுபோல, அனைத்துவகையான உதவிசார் செயல்பாடுகளுமே ஒரு தொடர் ஓட்டம் போன்றதுதான். பெற்றவர் தருபவராக மாறி, பல பெறுபவர்களைத் தருபவர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனையைப் பங்கேற்றவர்களின் மனதில் விதைத்து நிறைவுபெற்றிருக்கிறது விழா.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
